மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் வாகே. இவரது பக்கத்து வீட்டில் அக்ஷய் ஜாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தெருவில் உள்ள பொதுக் குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பெரும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அக்ஷய் ஜாதவ் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து உமேஷ் வாகேயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த உமேஷ் வாகே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார் உமேஷ் வாகேயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பக்கத்து வீட்டுக்காரரை அடித்துக் கொன்ற அக்ஷய் ஜாதவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.