இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்கக் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், நடுநிலையான முறையில் தேர்தலை நடத்தத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்குப் பின்பற்றப்படும் அதே கடினமான நடைமுறையைப் பின்பற்றி, தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க முடியும் என்பதால், சுமார் 180-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இந்த பதவி நீக்கத் தீர்மானத்திற்கான நோட்டீஸை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான அமைப்பான தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான தன்மையை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் அரசியலமைப்புச் சட்டம் 324(5)-ன் படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மை மூலம் மட்டுமே நீக்க முடியும். தற்போதைய சூழலில், தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை, இந்திய அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.