இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பத்தர் பகுதியில், அரசுப் பேருந்தின் பின்பக்க ஏணியில் பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோகிந்தர்நகர் பணிமனைக்குச் சொந்தமான இந்தப் பேருந்தில், சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் தனது உயிரைப் பணையம் வைத்து இவ்வாறு பயணம் செய்துள்ளார்.

மேலும் அண்மையில் ஊனாவில் நடந்த பள்ளிப் பேருந்து விபத்தில் ஒரு மாணவி உயிரிழந்த சோகம் மறைவதற்கு முன்பே, அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் இத்தகைய கவனக்குறைவு பொதுமக்களிடையே கடும் கோபத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவத்தை பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், வீடியோ எடுத்த நபர் சிறுவனை எச்சரித்துத் தடுக்காமல், வெறும் காட்சிக்காக மட்டும் பதிவு செய்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மலைப்பாங்கான சாலைகளில் இத்தகைய ஆபத்தான பயணங்கள் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.