இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்’ (லீட்ஸ் அணி) நிர்வாகம், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் ரூ. 2.34 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய உரிமையாளரைக் கொண்ட ஒரு அணி, பாகிஸ்தான் வீரரை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பிபிசி (BBC) நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பது குறித்து வெளியே பல்வேறு யூகங்கள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், குறிப்பிட்ட நாட்டு வீரர்களைத் தேர்வு செய்யக் கூடாது என நிர்வாகத் தரப்பிலிருந்து (காவ்யா மாறன் தரப்பு) எங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ அல்லது அறிவுறுத்தல்களோ வழங்கப்படவில்லை.
எங்கள் அணியின் தேவைக்கு ஏற்ற சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வதே எங்கள் இலக்காக இருந்தது. சர்வதேச அளவில் பல சுழற்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இருப்பினும், அப்ரார் அகமதுவே எங்களது முதல் தேர்வாக இருந்தார். அதனால்தான் அவரைத் தேர்வு செய்தோம்,” என அவர் தெளிவுபடுத்தினார்.
அப்ரார் அகமதுவின் அடிப்படை விலை சுமார் ரூ. 92.5 லட்சமாக மட்டுமே இருந்தது. இருப்பினும், அவரைத் தனது அணியில் இணைக்க ‘ட்ரெண்ட் ராக்கெட்ஸ்’ அணி கடும் போட்டி போட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ரூ. 2.34 கோடி என்ற மிகப்பெரிய தொகையைச் செலுத்தி சன்ரைசர்ஸ் நிர்வாகம் அவரைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்திய உரிமையாளரைக் கொண்ட ஒரு அணி, பாகிஸ்தான் வீரருக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதா எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை நோக்கிப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், வெட்டோரியின் இந்த விளக்கம், வீரர்களைத் தேர்வு செய்யும் முழு சுதந்திரம் பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவிற்கே வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.
