இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் நிர்வாகம் வாங்கியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதன் எதிரொலியாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ X பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டுத் தொடர்களிலும் இந்திய உரிமையாளர்கள் அவர்களைத் தவிர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக் கூடாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் 100 சதவீதப் பங்குகளை சன் டிவி குழுமம் வாங்கியுள்ள நிலையில், முதல் முறையாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை 2,55,000 அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ. 2.15 கோடி) அந்த அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை ரசிகர்கள் கூட்டாக ‘ரிப்போர்ட்’ (Mass Reporting) செய்ததன் காரணமாக, அந்தப் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை  நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

இந்த ஏலத்தில் அப்ரார் அகமது மற்றும் உஸ்மான் தாரிக் (பர்மிங்காம் பீனிக்ஸ் – 1,87,000 டாலர்) ஆகிய இரு பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே விற்பனையாகினர். ஷதாப் கான், சயம் அயூப் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, பிக்பாஷ் லீக் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹாரிஸ் ரவுஃப்-ஐ எந்த அணியும் வாங்க முன்வராதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதேபோல், பாகிஸ்தான் ஒருநாள் அணி கேப்டன் ஷாஹீன் அப்ரிடி ஏலத்திற்கு முன்பே தனது பெயரைத் திரும்பப் பெற்றார். மேலும் மகளிர் ஹண்ட்ரட் தொடரிலும் எந்த ஒரு பாகிஸ்தான் வீராங்கனையும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.