‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்த விவகாரத்தில், சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, அந்த அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.

சன் டிவி குழுமம் அண்மையில் ‘நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்’ அணியின் 100 சதவீதப் பங்குகளை வாங்கி, அதற்கு ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ எனப் பெயரிட்டது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பாகிஸ்தானின் அப்ரார் அகமதுவை 2,55,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 2.15 கோடி) கொடுத்து சன்ரைசர்ஸ் வாங்கியது.

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவ்யா மாறனின் இந்த முடிவு பிசிசிஐ-யின் எழுதப்படாத விதியை மீறுவதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர். ஏலத்தின் போது பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியுடன் காவ்யா மாறனும் இருந்த நிலையில், இந்த முடிவுக்கு அவர் ஏன் முட்டுக்கட்டை போடவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த எதிர்ப்பின் வெளிப்பாடாக, இந்திய ரசிகர்கள் அந்தப் பக்கத்தை ‘ரிப்போர்ட்’ செய்ததால், ‘விதிமுறைகளை மீறியதாக’க் கூறி எக்ஸ் தளம் சன்ரைசர்ஸ் லீட்ஸ் கணக்கை முடக்கியுள்ளது. காவ்யா மாறன் சந்தித்துள்ள இதே போன்ற ஒரு நெருக்கடியை முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) உரிமையாளர் ஷாருக்கானும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்கும் அதிரடி முடிவை ஷாருக்கான் எடுத்தார். மேலும் தற்போது அதே போன்றதொரு இக்கட்டான சூழலில் காவ்யா மாறன் சிக்கியுள்ளார். ரசிகர்களின் கடும் எதிர்ப்பால், அப்ரார் அகமது விஷயத்தில் காவ்யா மாறன் தனது முடிவை மாற்றிக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.