பொதுத்தேர்வைச் சரியாக எழுதவில்லை என்ற மனவருத்தத்தில், 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கணேஷ் (15), திருத்தணியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று மதியம் நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவர் கணேஷ், யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய கணேஷின் தம்பி புவன்ராஜ், தனது அண்ணன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மாணவனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருத்தணி போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவர் கணேஷ் தமிழ் மொழித்தேர்வைச் சரியாக எழுதவில்லை என்று வருந்தியிருப்பது தெரியவந்தது. இது குறித்து வேலைக்குச் சென்றிருந்த தனது தாய் பாரதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுதுகொண்டே கூறியுள்ளார்.
அப்போது தாய் பாரதி, “மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை, எதைப் பற்றியும் கவலைப்படாதே, வீட்டில் இரு, நான் மாலை வந்துவிடுகிறேன்” எனப் பலமுறை ஆறுதல் கூறியுள்ளார். தாயின் ஆறுதல் வார்த்தைகள் இருந்தபோதிலும், மனமுடைந்த மாணவர் கணேஷ் விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாணவன் தேர்வின் மீதான பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
