இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாட்டிற்குத் தனியாக வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் இணைய அடிமைத்தனத்தைக் குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு ஜிபி டேட்டாவிற்கு ஒரு ரூபாய் வரி விதித்தாலே, ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி வரை அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தொலைத்தொடர்புத் துறைக்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தற்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் நிலையில், இந்த புதிய வரி அமலுக்கு வந்தால் இணையச் செலவு கணிசமாக உயரும்.
ஏற்கனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் அதிகரித்துள்ள சூழலில், இந்த கூடுதல் வரிச் சுமை சாமானிய மக்களைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
