ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இது இந்தியாவிலும் எரிபொருள் விநியோகம் குறித்த கவலைகளை உருவாக்கியுள்ள சூழலில், மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய மையமாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை, போர் காரணமாகத் தற்காலிகமாக முடக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதுடன், விநியோகத்திலும் தேக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மொபைல் டவர்கள் மற்றும் இணையச் சேவை மையங்கள் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. மின்சாரத் தடை ஏற்படும் சமயங்களில், இவற்றைத் தொடர்ந்து இயக்க டீசல் அல்லது எல்பிஜி (LPG) மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவேளை எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால், ஜெனரேட்டர்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகளில் சுணக்கம் ஏற்படக்கூடும் என அத்துறையைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்துத் தெளிவுபடுத்தும் நிபுணர்கள் கூறுகையில், “இந்தியாவில் தற்போதைய நிலையில் மொபைல் மற்றும் இணைய சேவைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் முக்கிய மையங்களில் போதுமான அளவு பேட்டரி பேக்கப் மற்றும் டீசல் கையிருப்பு வைத்துள்ளன. எனவே, குறுகிய காலத்தில் எவ்விதத் தடையும் ஏற்படாது” என்று உறுதியளிக்கின்றனர்.
மேலும் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் நீண்டகாலத்திற்குச் சிக்கல் நீடித்தால் மட்டுமே, அதன் தாக்கம் பிற துறைகளைப் போலவே தொலைத்தொடர்புத் துறையையும் பாதிக்கக்கூடும். இருப்பினும், இந்தியா போன்ற நாடுகள் தங்களின் கையிருப்பை மேம்படுத்தி வருவதால், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
