இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா, தனது தந்தை மறைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு வரவிருக்கும் தொடருக்காகத் தன்னைத் தயார்படுத்தி வருகிறார். தனது தந்தையை இழந்தது குறித்துப் பேசிய அவர், “அவர் தான் என் ஹீரோ, அவர் இல்லாத இடத்தைச் யாராலும் நிரப்ப முடியாது. தந்தையை இழந்த பிறகுதான் பொறுப்புகள் என்னவென்று புரிகிறது. என்னால் பலவீனத்தைக் காட்ட முடியாது, அதனால் அந்தத் துயரத்தைச் சுமந்து கொண்டே கிரிக்கெட்டைத் தொடர்கிறேன்” என மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தந்தை மறைந்தாலும், அவர் விரும்பியதைச் செய்ய வேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் கூறியுள்ளார்.

​மேலும், உலகக்கோப்பை தொடரின் போது தனது தந்தையின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு அணிக்குத் திரும்பிய ரிங்கு சிங்கின் மன உறுதியை ஜித்தேஷ் சர்மா வெகுவாகப் பாராட்டியுள்ளார். “தந்தையை இழப்பது என்பது மிகுந்த வேதனையானது. ஆனால், அவர் உயிருடன் இருந்தால் நம்மிடம் என்ன எதிர்பார்த்திருப்பார் என்று நாம் சிந்திக்க வேண்டும். என் தந்தை இருந்திருந்தால் என்னைப் பயிற்சிக்குச் சென்று விளையாடச் சொல்லியிருப்பார். அதே சிந்தனையில்தான் ரிங்கு சிங்கும் நாட்டுக்காக விளையாடத் திரும்பியிருப்பார் என்று நான் நம்புகிறேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். வீரர்களின் இந்த அர்ப்பணிப்பு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.