2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது தொடக்கத்தில் வருத்தத்தை அளித்தாலும், பிப்ரவரி 1-ஆம் தேதி தனது தந்தை மோகன் சர்மாவை இழந்த பேரிழப்பு அந்தத் துயரத்தை மறக்கச் செய்ததாக இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜிதேஷ் சர்மா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் இறுதி நாட்களில் அவருடன் இருந்ததை உலகக்கோப்பையில் விளையாடுவதை விட முக்கியமானதாகக் கருதுவதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து மனம் திறந்த ஜிதேஷ், “உலகக்கோப்பைக்குத் தேர்வாகாதபோது ஒரு மனிதனாக நான் சற்று உடைந்து போனேன்.
ஆனால், என் தந்தையின் உடல்நிலை மோசமான போது, அவருக்குத் தான் என் தேவை அதிகம் என்பதை உணர்ந்தேன். கடவுள் என் தந்தையுடன் அந்த கடைசி ஏழு நாட்கள் இருக்க எனக்கு வாய்ப்பளித்தார், அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தற்போது குடும்பத்தின் மூத்த மகனாகத் தனது தாய் மற்றும் சகோதரனைப் பார்த்துக்கொள்ளும் பெரும் பொறுப்பை ஜிதேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார். தனது குடும்பத்தினர் முன் பலவீனமாக இருக்க விரும்பாத அவர், தனிப்பட்ட சோகங்களை மறைத்துக்கொண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த 32 வயதான ஜிதேஷ் சர்மா, இந்த 2026 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காகக் களம் இறங்க உள்ளார். மார்ச் 28-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஆர்சிபி தனது பயணத்தைத் தொடங்கவுள்ள நிலையில், தனது தந்தையின் ஆசீர்வாதத்துடன் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் அவர் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
