மத்தியப் பிரதேசத்தில் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் பெட்டிக்குள் (டிக்கி) பச்சிளம் குழந்தையை வைத்து, அந்தப் பெண் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குழந்தையின் பாதுகாப்பைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆபத்தான செயல், இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு பெண் தனது கையில் பச்சிளம் குழந்தையுடன் ஸ்கூட்டர் அருகே நிற்கிறார். ஸ்கூட்டரின் இருக்கையைத் திறந்து, அதன் அடியில் உள்ள ஸ்டோரேஜ் பெட்டியில் குழந்தையை மெதுவாக உள்ளே வைக்கிறார். குழந்தை தொப்பி அணிந்து அமைதியாகக் கிடப்பதையும் அந்தப் பெண் குழந்தையின் நிலையைச் சரிசெய்வதையும் காண முடிகிறது. குழந்தையை உள்ளே வைத்தவுடன், இருக்கையை மூடிவிட்டு ஸ்கூட்டரை
View this post on Instagram
– ஸ்டார்ட் செய்து அவர் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
ஸ்கூட்டரின் நம்பர் பிளேட்டில் ‘MP’ (மத்தியப் பிரதேசம்) என்ற குறியீடு இருப்பதால், இச்சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பொதுவாக ஸ்கூட்டர் டிக்கிகள் ஹெல்மெட், சிறிய பைகள் அல்லது பொருட்களை வைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறிய மற்றும் காற்றோட்டம் இல்லாத இடத்தில் குழந்தையை வைத்திருப்பது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வீடியோவைக் கண்டு கொதிப்படைந்த இணையவாசிகள், இது பொறுப்பற்ற பெற்றோரின் செயல் என்றும், பொழுதுபோக்கிற்காகவோ அல்லது லைக் பெறுவதற்காகவோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பொறுப்பற்ற முறையில் குழந்தையை ஆபத்துக்கு உள்ளாக்கிய அந்தப் பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.
