தனது மைத்துனியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, இந்திய விமானப்படை வீரர் ஒருவரை கான்பூர் சிறப்பு நீதிமன்றம் ஆதாரங்கள் இன்றி விடுதலை செய்துள்ளது. ‘நடந்தது உண்மைச் சம்பவம் அல்ல, அது வெறும் கனவுதான்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதாவது இந்திய  விமானப்படை வீரர் அனுராக் சுக்லா, கான்பூரின் நௌபஸ்தா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவரது மனைவி தங்கியிருந்த வீட்டிற்கு வந்திருந்த அவரது 15 வயது தங்கை (மைத்துனி), தான் தூங்கிக்கொண்டிருந்தபோது அனுராக் சுக்லா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2019-இல் அனுராக் சுக்லா மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்த கைது செய்யப்பட்ட அவர், 19 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

 இந்த வழக்கின் விசாரணை கான்பூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி ரஷ்மி சிங் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்தது. “சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அந்த நாளில், நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன். உட்கொண்ட ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் வீரியத்தால் நான் அரைமயக்கத்தில் இருந்தேன். அப்போது கண்ட கனவில் யாரோ என்னைப் பிடிப்பது போல உணர்ந்தேன். அதனால் பயந்துபோய் கத்தினேன். உண்மையில் அண்ணன் (அனுராக்) அந்தச் சம்பவத்தில் ஈடுபடவில்லை” என்று அவர் தெரிவித்தார். பெண்ணின் தந்தை மற்றும் சகோதரியும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், ஆதாரங்கள் இல்லாததால் அனுராக் சுக்லாவை நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கு குறித்து அனுராக் சுக்லா கூறுகையில், “சொத்துகளை என் மனைவி மற்றும் மைத்துனி பெயருக்கு மாற்ற வேண்டும் என என் மாமனார் கட்டாயப்படுத்தினார். அதற்கு மறுத்ததால் இந்த வழக்கில் திட்டமிட்டுப் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டேன். இந்த வழக்கால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சமூக அவப்பெயர் மட்டுமின்றி, கடந்த 2020-ஆம் ஆண்டு எனக்குக் கிடைக்க வேண்டிய ‘கார்போரல்’ பதவி உயர்வும் பறிபோனது. எனது வாழ்நாள் முழுவதும் இந்த கறை நீங்காது,” என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்திய விமானப்படை வீரர் ஒருவரின் ஏழு ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அவர் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.