இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இன்றைய உலக கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராகத் திகழ்கிறார். எதிரணி பேட்ஸ்மேன்கள் பும்ராவின் நான்கு ஓவர்களை எதிர்கொள்ளவே அஞ்சி நடுங்குவார்கள். குறிப்பாக, அவர் வீசும் திடீர் ‘ஸ்லோ பால்கள்’ பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பதில் வல்லவை. இந்த ரகசியப் பந்துவீச்சைத் தான்தான் பும்ராவுக்குக் கற்றுக்கொடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜஹூர் கான் தற்போது கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இவர் பாகிஸ்தானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது கடந்த2019-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஜஹூர் கான் செயல்பட்டார். அப்போது பும்ராவுடன் அவர் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில், பந்துவீச்சு நுட்பங்கள் குறித்து இருவருக்கும் இடையே விரிவான விவாதம் நடந்துள்ளது.
இது குறித்து ஜஹூர் கான் கூறுகையில், “பும்ரா முன்பே ஸ்லோ பால்களை வீசுவார், ஆனால் அவை அவ்வளவு துல்லியமாக இருக்காது. அந்தப் பயிற்சி முகாமின் போது, பந்துவீச்சு ஆக்ஷன் மற்றும் பந்தைப் பிடிக்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், எப்படி ஸ்லோ பால்களை வீச வேண்டும் என்பதை நான் செய்து காட்டினேன். சாதாரணமான பந்துவீச்சு ஆக்ஷனிலேயே, பேட்ஸ்மேன்களை ஏமாற்றும் வகையில் வேகத்தைக் குறைக்கும் அந்த நுட்பம் ஷேன் பாண்ட் மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோருக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்தது,” என்று குறிப்பிட்டார்.
அந்த சமயத்திலேயே பும்ரா ஒரு சர்வதேச நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இருப்பினும், ஜஹூர் கானின் பந்துவீச்சைக் கண்டு வியந்து, அவரிடமே நேரில் சென்று அந்த ஸ்லோ பால் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டார். “பும்ரா ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும், என்னிடம் வந்து பணிவுடன் கேட்டுத் தெரிந்துகொண்ட அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பயிற்சியின் போது அவர் அதனை முயற்சி செய்து பார்த்து, அடுத்த நிலைக்குத் தனது பந்துவீச்சை உயர்த்திக்கொண்டார்,” என்று ஜஹூர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும் பும்ராவின் இத்தகைய தன்னடக்கமும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வமுமே அவரை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாற்றியுள்ளது என்பதற்கு, ஜஹூர் கானின் இந்தச் சம்பவம் ஒரு சிறந்த சான்றாகப் பார்க்கப்படுகிறது.
