தமிழக அரசியலில் புதிய திருப்பமாகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் சசிகலா தரப்பு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் அரசியல் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள சசிகலா எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் கட்சியுடன் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக சசிகலாவின் உறவினர் ஜெய் ஆனந்த் தற்பொழுது தவெக நிர்வாகிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை ஒதுக்குவதுடன் தேர்தலில் வெற்றி பெற்றால் துணை முதலமைச்சர் பதவியையும் வழங்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தியுள்ளதாகத் கூறப்படுகிறது.
சசிகலா தரப்பில் வைக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனைகள் குறித்து விஜய் தரப்பினர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கத் துடிக்கும் தவெகவிற்கு சசிகலாவின் ஆதரவு எந்த வகையில் கைகொடுக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
