சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் சாமானிய மக்களின் அடுப்பங்கரை வரை ஊடுருவியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலைக் கருத்தில் கொண்டு, ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டரை பதிவு செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. முன்னதாக இந்த கால இடைவெளி 21 நாட்களாக இருந்த நிலையில், தற்போது நான்கு நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சு. வெங்கடேசன், சர்வதேச அரசியல் மோதல்கள் நேரடியாக நம் வீட்டு சமையலிலும் அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஹோட்டல்களின் எரிவாயு தேவையை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.