நடிகை த்ரிஷா குறித்து பொதுமேடையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த விவகாரம் தொடர்பாக, நடிகர் பார்த்திபன் தற்போது விரிவான விளக்கமளித்துள்ளார். “விஜய்யின் அரசியல் பயணத்தின் மீதான ஆதங்கத்தில் வெளிப்பட்ட கருத்தே தவிர, யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு தனியார் நிகழ்ச்சியில் த்ரிஷாவின் புகைப்படத்தைப் பார்த்து பார்த்திபன் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதற்கு த்ரிஷா தனது சமூக வலைதளப் பதிவில் மறைமுகமாகக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பார்த்திபன் தனது யூடியூப் சேனலில் விரிவான விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியதாவது: “அந்த நிகழ்ச்சியின் இடைவேளையின்போது, திரைப்பட விமர்சகர் அந்தணன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்துப் பேசிய விமர்சனங்களை நான் சமூக வலைதளங்களில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது த்ரிஷாவின் படம் திரையில் வந்ததால், அந்தச் சூழலில் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறித்தான் அந்தக் கருத்தைச் சொன்னேன். இது திட்டமிட்ட ஒன்று அல்ல.”
“நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒருவர் இதன் தீவிரத்தை உணர்த்தினார். உடனே அந்தச் சேனலுக்குத் தொடர்பு கொண்டு, அந்தப் பகுதியை நீக்கிவிடுமாறு கேட்டேன். ஆனால், ரசிகர் ஒருவர் அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிட்டார்.” “வீடியோ வைரலானதும் மன்னிப்பு கேட்க வீடியோ எடுத்தேன். ஆனால், அதை எடிட் செய்து பதிவேற்றுவதற்குள் த்ரிஷா தனது பதிலை வெளியிட்டுவிட்டார்.
விஜய் மற்றும் த்ரிஷா விவகாரம் குறித்துப் பேசிய பார்த்திபன், “விஜய் எனது நெருங்கிய நண்பர். அவருடைய விவாகரத்து விவகாரம் இன்னும் சட்டப்படி முடிவுக்கு வராத நிலையில், அவர் இன்னும் சங்கீதாவின் கணவர்தான். அப்படியிருக்கும்போது, மூன்றாவது நபராக நான் த்ரிஷாவைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை. நான் யாரையும் தரக்குறைவாகப் பேசும் நபர் அல்ல” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
“வேண்டுமென்றே த்ரிஷாவின் புகைப்படத்தைத் திரையில் காட்டி, அதற்கு நான் பதில் சொல்லும் வகையில் ஒரு சூழல் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. பெண்களைக் கண்ணியத்துடன் மதிக்கும் குணம் கொண்டவன் நான்” என்றும் அவர் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.
அதேநேரத்தில் தனது விளக்க வீடியோவில், தாம் ஏன் அந்தத் தரக்குறைவான கருத்தைப் பயன்படுத்தினேன் என்பதற்கான காரணத்தை பார்த்திபன் விளக்கியுள்ளார். நிகழ்ச்சி இடைவேளையின்போது, திரைப்பட விமர்சகர் அந்தணன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்துச் சமூக வலைதளங்களில் பேசிய விமர்சனங்களை நான் கவனித்தேன். அதில், விஜய் அரசியலில் பெரும் எழுச்சியைச் சந்தித்து வரும் நிலையில், இத்தகைய சர்ச்சைகள் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையே வெளிப்பட்டிருந்தது.”
“விஜய் அந்தத் திருமண நிகழ்விற்குச் சென்றதில் எனக்குப் பெரிய மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், த்ரிஷாவும் அவருடன் சென்றது ரசிகர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷாவுக்கு நல்ல முதிர்ச்சி உண்டு, எனவே அவர் அந்தத் தருணத்தில் தனது வருகையைத் தவிர்த்திருக்கலாம் அல்லது விஜய்யின் அரசியல் பயணம் பாதிக்காத வகையில் நடந்துகொண்டிருக்கலாம் என்பதுதான் அந்த அந்தணனின் ஆதங்கமாக இருந்தது. அதையே நானும் வெளிப்படுத்தினேன்.”
தொடர்ந்து பேசிய பார்த்திபன், “நான் த்ரிஷாவைத் தனிப்பட்ட முறையில் அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. விஜய்யின் அரசியல் வெற்றிக்குத் தடையாக இது போன்ற நிகழ்வுகள் அமைந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில்தான், அந்தச் சூழலில் என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்தபோது அந்தக் கருத்தைச் சொன்னேன். அந்தணனைப் போன்றே பல பத்திரிகையாளர்களும், சினிமா ஆர்வலர்களும் இதே கவலையைத்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் பார்த்திபன் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என கூறி தனக்கு ஒரு மிரட்டல் போன் கால் வந்ததாக கூறியது தற்போது புது வியூகத்தை கிளப்பியுள்ள நிலையில் அந்த போன் போட்டது யார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
