மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளைப் பார்வையிட மம்மூட்டி சென்றிருந்தார்.
அப்போது அங்கிருந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. ரபீக் என்பவரைத் தன்னிடம் இருந்து சற்று தள்ளி இருக்குமாறு மம்மூட்டி கூறியதாகத் தெரிகிறது. மம்மூட்டியின் இந்தச் செயல் சிபிஎம் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் மம்மூட்டிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் சைபர் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், மம்மூட்டிக்கு நேர்ந்த மன உளைச்சலுக்காக வருத்தம் தெரிவித்தார். மம்மூட்டி எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி, மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அந்த இடத்தைப் பார்வையிட வந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒருவேளை சிபிஎம் கட்சியினர் யாரேனும் அவரைச் சமூக வலைதளங்களில் விமர்சித்திருந்தால் அதற்காகத் தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். மம்மூட்டி போன்ற ஒரு சிறந்த கலைஞரைச் சிறுமைப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய அவர், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
