அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்து உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டது அந்த நாட்டு அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முக்கியத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போர் தற்போது லெபனான் மற்றும் சிரியா வரை பரவியுள்ளது. இந்த மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து ஒரு பேரல் 110 டாலரைத் தாண்டியுள்ளதுடன் சர்வதேச பங்குச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்த அசாதாரணமான சூழலால் உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சம் மேலோங்கியுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் தங்களின் உணவுத் தேவைகளுக்காக 90 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியையே நம்பியுள்ள நிலையில் ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டது பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா தனது நட்பு கரத்தை நீட்டி ஈரானுக்கும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நூற்றுக்கணக்கான டன் உணவுப் பொருட்களைக் கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் சரக்குக் கப்பல்களின் வருகை பெருமளவு குறைந்துள்ள நிலையில் இந்தியாவின் இந்த மனிதாபிமான உதவி மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டைப் போக்கப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
