குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற காவல்துறையினர் மாணவிகளின் தொலைபேசி சிக்னல்களைக் கண்காணித்தபோது அவர்கள் சூரத்தில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவில் வளாகத்திற்கு வெளியே ஒரு மாணவியின் ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர்கள் இருவரும் கழிப்பறைக்குள் நுழைவது பதிவாகியிருந்தது. இறுதியில் அங்குள்ள கழிப்பறையிலிருந்து இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. அந்த இடத்திலிருந்து மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசிகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் உதவி ஆணையர் மாணவிகள் இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்ததை உறுதிப்படுத்தினார். அவர்களின் கைப்பேசியைச் சோதித்தபோது தற்கொலை செய்துகொள்வதற்கு எந்த மாதிரியான மருந்துகளைப் பயன்படுத்தலாம் எனச் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் தேடியுள்ளது தெரிய வந்தது.
மேலும் மயக்க மருந்து செலுத்தித் தற்கொலை செய்வது போன்ற படத்தையும் அவர்கள் சேமித்து வைத்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தற்கொலை முயற்சிகளுக்கு நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலையை எண்ணித் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
