மும்பை கார் சுரங்கப்பாதை அருகே இளம்பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த நபரை, அங்கிருந்தவர்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் பெண்களின் நடவடிக்கைகளை அந்த நபர் தனது அலைபேசியில் ரகசியமாகப் பதிவு செய்து வந்துள்ளார்.

இதனை கவனித்த சில பெண்கள் மற்றும் பொதுமக்கள், அந்த நபரைத் தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்டனர். அவரது அலைபேசியைச் சோதித்தபோது, அதில் பல பெண்களின் வீடியோக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>

மேலும் வீடியோவில், பொதுமக்கள் அந்த நபரை கன்னத்தில் அறைந்து, சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் காண முடிகிறது. பின்னர் அந்த நபர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த துணிச்சலான செயலைச் செய்த பெண்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.