நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், திமுக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே சிறுமி கடத்தப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக அவர் சாடியுள்ளார். “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்று விளம்பரம் செய்யும் திமுக அரசு, உண்மையில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், இது போன்ற சம்பவங்களால் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தவிப்பதே இந்த “திராவிட மாடல்” ஆட்சியின் அவலம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு அரசியல்வாதியாகப் பார்க்காமல், ஒரு “அப்பா” ஸ்தானத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்தால் இந்தத் துரோகத்தை மன்னிப்பாரா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுமி விரைவில் குணமடைய அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கிவிட்டு, விளம்பர விழாக்கள் மூலம் அதை மறைக்க முடியாது என்றும், வாக்களித்த பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய முதல்வர் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களைச் சந்திப்பார் என்றும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
