சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழகப் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்று அவர் பாராட்டினார்.

குறிப்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்ற வாக்குறுதி பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் திருமணத்தின்போது ஒரு பவுன் தங்கம் வழங்குவது மற்றும் பிறக்கும் குழந்தைகளை அரசு சார்பில் வரவேற்பது உள்ளிட்ட திட்டங்கள் தமிழகப் பெண்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அக்கட்சியின் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும்போது மக்கள் எழுச்சியை அனைவரும் காண்பார்கள் என்று குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா அப்போது தங்களை யாராலும் முடக்கி வைக்க முடியாது என்று ஆவேசமாகப் பேசினார்.

இதே மேடையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் திடீரென வந்த கட்சிகளுக்குக் கூட மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கப்படும் நிலையில் அவர் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகப் பெண்கள் தங்கள் கட்சியின் தலைவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் தமிழகத்தில் விரைவில் மக்கள் நலன் காக்கும் ஆட்சி மலரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.