தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வருகை குறித்துத் தாம் எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடவில்லை என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இதற்கிடையே நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாகச் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விஜய் பங்கேற்றது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியதாகச் செய்திகள் பரவின.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தாம் விஜய்யை ஒரு மரியாதைக்குரிய மற்றும் அமைதியான சக கலைஞராக மட்டுமே அறிவதாகவும் அவரது தாயார் மீது தமக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு மேடையில் தாம் பேசிய சில வரிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவை விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளிதழ் இது குறித்துக் கேட்டபோது தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கும் திறன் மக்களுக்கு உண்டு என்றும் தேர்தல் காலம் என்பதால் இத்தகைய செய்திகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் மட்டுமே தாம் கூறியதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் சமூகத்தில் வன்முறை மற்றும் அநீதிகளை எதிர்கொள்ளும் பெண்களுக்குச் சட்ட உதவி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்குவதே தற்போதைய முக்கியத் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நிலைப்பாட்டைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.