டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவை நீக்கிவிட்டு ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், குறிப்பாக 0, 0, 0, 15, 55, 10 மற்றும் 9 என அவரது ரன் குவிப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் திணறுவதையும், ஒரே மாதிரியான தவறுகளைச் செய்து ஆட்டமிழப்பதையும் விமர்சித்த கவாஸ்கர், அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளத் தவறிவிட்டார் என்றும், இது அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ள நிலையில், தொடக்க வீரராக சஞ்சு சாம்சனுடன் இஷான் கிஷானை களமிறக்க வேண்டும் என்று கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், பேட்டிங் வரிசையில் பலம் சேர்க்கும் வகையில் அதிரடி வீரர் ரிங்கு சிங்கை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ரிங்கு சிங் போன்ற வீரர்களிடம் கடினமான சூழலையும் கையாளும் நம்பிக்கை உள்ளதால், முக்கியமான இந்த இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என அவர் நம்புகிறார். அத்துடன், பார்ம் அவுட்டில் இருக்கும் வருண் சக்கரவர்த்திக்கு பதில் குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பது பந்துவீச்சுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.