தமிழக அரசின் பட்ஜெட் நிதியில் 30 சதவீதம் முறைகேடாக கைமாற்றப்படுவதாகவும், அதற்குப் பெயர் ‘ஸ்டாலின் சார் வரி’ என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா  கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது,

“தமிழகத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 4.39 லட்சம் கோடி ரூபாய். இதில் 30 சதவீத நிதி ‘ஸ்டாலின் சார் வரி’ என்ற பெயரில் முறையற்ற வழிகளில் செல்கிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவீதம் முதலமைச்சருக்கும், 10 சதவீதம் அமைச்சர்களுக்கும் என மொத்தம் 30 சதவீதம் கமிஷன் அடிப்படையில் கைமாறுகிறது. பொதுவாக மக்கள் தான் அரசாங்கத்திற்கு வரி கொடுப்பார்கள். ஆனால், இங்கே அரசாங்கமே ஒரு தனி நபருக்கு வரி கொடுப்பது போன்ற சூழல் நிலவுகிறது. இதை ‘ஸ்டாலின் சார் வரி’ என்றுதான் அழைக்க வேண்டும்.”

“அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, தேர்தலை ஒட்டி விடியற்காலையில் மக்களின் வங்கிக் கணக்குகளில் 2,000 முதல் 5,000 ரூபாய் வரை செலுத்தப்படுகிறது. அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது, ஆனால் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும் தான் நிதிப் பற்றாக்குறைக்குக் காரணம். மக்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தை ‘சைடு’ எடுக்காமல் முழுமையாக மக்களுக்கே செலவு செய்தால், ஒரு சிறந்த அரசாங்கத்தைக் கொடுக்க முடியும்.”

“ஸ்டாலினால் செய்ய முடியாததை நீங்கள் எப்படி செய்வீர்கள் என்று என்னிடம் கேட்கலாம். இந்த ‘ஸ்டாலின் சார் வரி’ என்ற முறைகேட்டை ஒழித்தாலே போதும், தமிழகத்தில் நிதி நிலைமை சீராகும். அதைச் செய்தாலே அனைத்துத் திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்த முடியும்” என விஜய் பேசினார்.

மேலும் இந்த விழாவில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். விஜய்யின் இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.