தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ச.ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும் ரூ.147 கோடி மட்டுமே ஒதுக்கி பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியை வழங்குவோம் என ரூ.3,500 கோடியை மத்திய அரசு தடுத்து வைத்திருப்பதாகவும், ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடமில்லை என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தாய் வாழ்த்து உருவான கரந்தை தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றுச் சிறப்புகளைப் பாராட்டிய உதயநிதி, இந்தித் திணிப்பைத் தமிழகம் எப்போதும் அனுமதிக்காது என்றார். தமிழறிஞர்களுக்கு விருதுகள், எழுத்தாளர்களுக்கு வீடுகள் மற்றும் தமிழ் நூல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பது எனத் தமிழக அரசு தமிழுக்காகத் தொடர்ந்து உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“தமிழ், தமிழ்” என்று கூறி மக்களை ஏமாற்றும் மத்திய அரசின் போலித்தனத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், தமிழுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.