சமூக வலைதளங்களில் தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக இளைஞர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகள் அவ்வப்போது பெரும் விபரீதத்தில் முடிந்து விடுகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு அதிர்ச்சி வீடியோவில் இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலின் படிக்கட்டில் நின்றபடி மிகவும் ஆபத்தான முறையில் வீடியோ எடுத்துள்ளார்.

ரெயிலுக்கு வெளியே உடலை சாய்த்து தனது நண்பர் மூலம் காட்சிகளைப் படமாக்கிய அந்த இளைஞர் தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அந்த இளைஞர் ரெயில் சக்கரத்தில் சிக்கினாரா அல்லது அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும் மோதிய வேகம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மிகக் கொடூரமானதாக இருந்தது.

சுமார் இருபத்து மூன்று லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ள இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து இத்தகைய உயிருக்கு உலை வைக்கும் செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.