நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2ம் தேதி இரவு தேநீர்க்கடை முன்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இந்த கோரமான சம்பவத்தில் பெரும்பத்து இந்திராகாலனியைச் சேர்ந்த ஜான் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நெல்சன், கணேசன் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பழைய பகை காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக தென்னிமலையைச் சேர்ந்த கண்ணன், அந்தோணி மைக்கேல்ராஜ் உள்ளிட்ட 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட ஏழு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் நோட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடும் இடத்தைத் திட்டமிட்டுத் தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் செல்வதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி இவர்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட இளைஞர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த ஜானின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. தற்போது முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடலைப் பெற்றுக்கொண்டனர்.
இதனால் நாகர்கோவில் செல்லும் சாலையில் போக்குவரத்துச் சீரானது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் களக்காடு செல்லும் சாலையில் மட்டும் இன்னும் போக்குவரத்துத் தடை நீடிக்கிறது.
