ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக துபாயில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஏராளமான பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், பாலிவுட் நடிகர் சோனு சூட் துபாயில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒரு மகத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துபாயில் தங்குவதற்கு இடமின்றி தவிப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி இலவச தங்குமிட வசதி செய்து தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “துபாயில் சிக்கியுள்ள இந்தியர்கள் மட்டுமின்றி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் தங்குமிடம் வழங்கப்படும் இதற்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது, இது மனிதநேயத்திற்கான உதவி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உதவி தேவைப்படுபவர்கள் தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ள சோனு சூட், துபாயில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலம் ‘நிஜ நாயகன்’ என்று போற்றப்பட்ட சோனு சூட், தற்போது சர்வதேச நெருக்கடியின் போதும் களமிறங்கியிருப்பது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. போர்ச் சூழலால் நிலவும் நிச்சயமற்ற தன்மையில், உணவிற்கும் தங்குமிடத்திற்கும் வழியின்றி தவிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு இவரது இந்த உதவி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
