தஞ்சாவூர் மாவட்டம் அய்யாசாமிபட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விவசாய மண்டலமான தஞ்சாவூரில் பச்சைத் துண்டு அணிந்து உரையாற்றிய அவர், “நான் ஒரு டெல்டாகாரன் என்று கூறி உங்கள் காதில் டால்டா ஊற்ற விரும்பவில்லை” என்று முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாகச் சாடினார்.
மேலும், தமிழ்நாட்டில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த சரித்திரமே இல்லை என்றும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலேயே முடியாத ஒன்று இப்போது நடக்காது என்றும் அவர் அதிரடியாகப் பேசினார். நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசால் எதையும் செய்ய முடியாது என்று தெரிந்தே, திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தன்னை அரசியலில் வளர விடாமல் தடுக்க ரகசிய ‘டீலிங்’ போட்டுக்கொண்டு செயல்படுவதாக விஜய் வேதனை தெரிவித்தார். “ஒரு பக்கம் திமுக அரசு தனது பிரச்சாரங்களை முடக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விதிக்கிறது, மறுபக்கம் அதிமுக தன் மீது வீண் பழிகளைச் சுமத்துகிறது” என்று அவர் கூறினார்.
இதனால் “ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி” என ஒரு காலத்தில் சொல்லப்பட்டதை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால் மாநிலம் திவாலாகி வருவதாகத் தெரிவித்தார். இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், அது திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் ஐந்தாண்டுகளுக்குள் அவற்றைச் செயல்படுத்திக் காட்டும் என்றும் உறுதி அளித்தார்.
