சமூக வலைத்தளங்களில் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் எக்ஸ் தளத்தை கடந்த 2022 ஆண்டில் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். முன்னதாக ட்விட்டர் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த தளத்தில் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்.
உலக அளவில் 586 மில்லியன் மக்களும் இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் மக்களும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் இதில் பகிரப்படும் ஆபாசப் பதிவுகள் மற்றும் காணொலிகளுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.
தற்போது இந்திய பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று எக்ஸ் நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியாவில் மட்டும் ஆபாசப் பதிவுகள் மற்றும் காணொலிகள் பகிரப்படுவதற்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான க்ரோக் வாயிலாகப் பயனாளர்கள் கேட்டபோது இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இனி இத்தகைய பதிவுகள் பயனாளர்களுக்குக் காட்டப்படாது என்று பதில் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியப் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
