பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானில் நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமேனியின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஈரான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதே சமயம் பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருந்த கமேனியின் இருப்பிடத்தை அமெரிக்கா எவ்வாறு கண்டறிந்தது என்பது குறித்துப் பல்வேறு மர்மத் தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.
கமேனியின் இருப்பிடத்தை அறிய இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் ஒரு விசித்திரமான உத்தியைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி ஈரான் நாட்டின் உயர் அதிகாரிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் போல மொசாட் ஏஜெண்டுகள் ஊடுருவியதாகத் தெரிகிறது.
அவர்கள் அதிகாரிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் பற்களில் மிகச்சிறிய கண்காணிப்புச் சாதனங்களைப் பொருத்தியதாகவும் அதன் மூலம் கமேனியின் நடமாட்டத்தை உளவு பார்த்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
கமேனி பதுங்கு குழியில் ஒளிந்து கொள்ள மறுத்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினாலும் இந்த உளவுத் தகவல்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
