டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் அரையிறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்தப் போட்டி குறித்துப் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கன்ராட், அகமதாபாத் மைதானம் தங்களுக்கு ஒரு “சொந்த மைதானம்” போன்ற உணர்வைத் தருவதாக மிகவும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகள் இதே மைதானத்தில் நடந்ததால், இங்கிருக்கும் சூழல் தங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்தின் ஒவ்வொரு பகுதியையும் தாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதால், அரையிறுதியில் வென்று மீண்டும் இதே மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.