அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் இரண்டாம் நாளில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை மீது இஸ்ரேலியப் படைகள் குண்டு மழை பொழிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனை வளாகத்தில் சக்கர நாற்காலிகளுக்கு அருகே கட்டிடச் சிதைவுகள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் அந்நாட்டுச் செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் மருத்துவமனைக்குக் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தெஹ்ரானின் முக்கியப் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் சவுதி அரேபியா மற்றும் துபாய் மீதும் பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் கமேனியின் மறைவைத் தொடர்ந்து புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை நிர்வகிக்க அதிபர் மசூத் பெசெஷ்கியன் தலைமையில் மூன்று பேர் கொண்ட தற்காலிகத் தலைமைச் சபை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் நூறு போர் விமானங்கள் ஒரே நேரத்தில் தெஹ்ரானில் உள்ள அரசு மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரிவுகளைச் சிதைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு ஆசியாவில் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
