ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ‘கைபர்’ (Kheibar) ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகுவின் நிலை என்ன என்பது குறித்து மர்மம் நீடிப்பதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை மறுத்துள்ள இஸ்ரேல் தரப்பு, பிரதமர் நெதன்யாகு பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

​மறுபுறம், ஈரானின் அணுசக்தித் திட்டங்களைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lion’s Roar) என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 28 முதல் மிகக்கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உறுதி செய்துள்ளன. இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள இந்த மோதலால், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.