அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இழுபறியை காரணமாகக் கொண்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்தத் தொடர் தாக்குதல்களில், ஈரானின் மிக உயரிய தலைவரான அலி கமேனி உயிரிழந்தது பிராந்தியத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தன் நாட்டின் உச்ச தலைவரைக் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னதாக, சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. இதேபோன்று இஸ்ரேலின் விமானப்படை தளபதி அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக நெதன்யாகு நிலை என்ன என்று தெரியாததால் உலக நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.