ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர்-8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தியது. எனினும், ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேற, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு, கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஷாகின் அப்ரிடி வீசிய அந்த ஓவரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என விளாசி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தார்.

கடைசிப் பந்தில் 6 ரன்கள் தேவை என்றபோது, அப்ரிடி வீசிய பந்து ‘வைடு’ கோட்டுக்கு மிக அருகே சென்றது. அதை நடுவர் ‘வைடு’ என அறிவிக்க மறுத்துவிட்டார். இதனால் பாகிஸ்தான் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த இலங்கை தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, டக்-அவுட்டில் இருந்தபடியே தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அது தெளிவான ‘வைடு’ என சைகை காட்டிய அவர், நடுவரின் செயல்பாட்டால் மிகுந்த அதிருப்தி அடைந்தார். ஷனகா 31 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்தும், நடுவரின் ஒரு முடிவால் இலங்கையின் போராட்டம் வீணானது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. சிறந்த நெட் ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தானின் உலகக் கோப்பை கனவு இந்த வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

மேலும் உலக கோப்பையில் இலங்கை அணி தோல்வி அடைந்ததால் இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜெயசூர்யா விலங்கு முடிவு செய்துள்ள நிலையில் இது தொடர்பாக தன்னுடைய முடிவை தலைமைக்கு அவர் தெரிவித்துள்ளார்.