மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் மீது, அவரது உறவினரான 17 வயது சிறுமி கடந்த 2024-ல் ஒரு பாலியல் புகாரை அளித்தார்.
தனது தாய்மாமனான அந்தத் தொழிலதிபர், பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது தனக்குத் தவறான மெசேஜ்கள் அனுப்பியதாகவும், முத்தம் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகவும் அந்தச் சிறுமி போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒரு அதிரடித் திருப்பம் ஏற்பட்டது. “அது ஒரு தவறான புரிதலால் அளிக்கப்பட்ட புகார், இப்போது குடும்பங்களுக்குள் சமரசம் ஏற்பட்டுவிட்டது” எனச் சிறுமியின் தரப்பிலும், தொழிலதிபர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை மேற்கொண்டு நடத்த விருப்பமில்லை எனச் சிறுமி கூறியதை அடுத்து, நீதிபதிகள் அந்தத் தொழிலதிபர் மீதான வழக்கை ரத்து செய்தனர்.
போக்சோ வழக்கில் சிக்கியிருந்த தொழிலதிபர்ருக்கு தீர்ப்பளித்த விதம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. பாலியல் குற்றம் சாட்டப்பட்ட அந்தத் தொழிலதிபர் மீதான வழக்கை இரு தரப்பு சமரசத்தின் அடிப்படையில் நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், தேவையற்ற வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்ததற்காக அந்த நபருக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அந்தத் தொகையை, பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உயர்கல்விக்கு உதவும் வகையில், ஒரு புதிய லேப்டாப் வாங்கித் தருவதற்குப் பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து அந்தத் தொழிலதிபர் விடுவிக்கப்பட்டாலும், இந்த உத்தரவு அவருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
