ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சந்தியா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் சந்தியாவின் சகோதரர்களுக்குத் தெரிந்தபோது, சாதி வேறுபாட்டைக் காரணம் காட்டி அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பிரகாஷும் சந்தியாவும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்தத் தகவலைப் புகைப்படங்களுடன் சந்தியா தனது சகோதரர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள், வேலையில்லாமல் இருக்கும் பிரகாஷைத் திருமணம் செய்துகொண்டதில் மிகுந்த கோபமடைந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு, பிரகாஷும் சந்தியாவும் முதலிரவுக்காக மணமகனின் வீட்டிற்குச் சென்றபோது, அங்கே பதுங்கியிருந்த சந்தியாவின் சகோதரர்கள் எதிர்பாராத விதமாக பிரகாஷைக் கற்களால் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பிரகாஷைக் கண்டு சந்தியா கதறி அழுதார். இந்த அதிர்ச்சிகரமான ஆணவக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான குற்றவாளிகளைத் தேடிப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.