ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக, மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவின் (CCS) அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்கள் மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முன்னுரிமையாக உள்ளது.

முன்னதாக, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் வெளியுறவு அமைச்சகம், அண்டை நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.