ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நேற்று அதிரடித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்பத்தினர், பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் மற்றும் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவுவதுடன், பெரும் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. உலகின் 20 முதல் 30 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி இந்த வழித்தடத்தின் வழியாகவே நடைபெறுகிறது. தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த வழித்தடத்தை மூடிவிடுவோம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், ஜலசந்தியை மூடியது குறித்து ஈரானிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 முதல் 90 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. எனவே, இந்தச் சூழல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, விலை உயர்விற்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.