திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகோட்டையைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவரான மருதமுத்து (42), நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்துத் தாக்கியுள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்கத் தென்னந்தோப்பிற்குள் ஓடிய மருதமுத்துவை விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான முன்விரோதமே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், தப்பியோடிய கொலையாளிகளை வடமதுரை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
