ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், ஷிவம் துபேவின் மோசமான பந்துவீச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நெட் ரன்ரேட்டை இந்தியாவால் முந்தியிருக்க முடியும். மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், துபே மட்டும் 2 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கினார்.

இது டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர், துபேவின் மீதான நம்பிக்கை போய்விட்டதாகவும், இனி அவரை ஒரு ஆல்ரவுண்டராகக் கருத முடியாது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மறுபுறம், தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகவும், இஷான் கிஷன் ஒன்டவுன் வீரராகவும் களமிறங்குகின்றனர்.

மிடில் ஆர்டரில் சொதப்பிய திலக் வர்மாவுக்கு பினிஷர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் அதில் மிரட்டலாகச் செயல்பட்டுள்ளார். அதேசமயம், கடந்த சில போட்டிகளில் மிகக் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய ரிங்கு சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இனி வரும் போட்டிகளிலும் இதே பேட்டிங் வரிசை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.