ஓ. பன்னீர்செல்வம், இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
அவருடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், முன்னாள் எம்பி-யும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். முன்னதாக, சென்னை ஆர்.கே. சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ஓபிஎஸ்-ஸை, திமுக அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்துச் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்; ஓபிஎஸ்-ஸின் வருகை திமுக-வை மேலும் பலப்படுத்தும்” எனத் தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக-விலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஸ்டாலினுடன் அவர் கைகோர்த்திருப்பது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
