உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், மூன்று வயது பெண் குழந்தையை அவரது மாற்றாந்தாய் கோடரியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரிவேணி மௌரியா என்பவரின் முதல் மனைவி இறந்துவிட்டதால், தனது 3 வயது மகள் அதிதியைப் பராமரிப்பதற்காக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண், நள்ளிரவில் சிறுமி அதிதிக்கு உடலில் எண்ணெய் தேய்த்து, நெற்றியில் குங்குமம் வைத்து அலங்கரித்துள்ளார். பின்னர், வீட்டின் பூஜை அறைக்குச் சிறுமியை அழைத்துச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த கோடரியால் சிறுமியின் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டாக்கியுள்ளார்.
வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த திரிவேணி, உள்ளே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து சென்று பார்த்தபோது, மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். உடனே அந்தப் பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடித்துப் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமிக்கு எண்ணெய் தேய்த்து, குங்குமம் வைத்துப் பூஜை அறையில் வைத்துக் கொலை செய்துள்ளதால், இது ‘நரபலி’ கொடுப்பதற்காகச் செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என கிராம மக்கள் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் போலீஸ் அதிகாரிகள், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில்:
“குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கொலை எதற்காகச் செய்யப்பட்டது? இதில் நரபலி பின்னணி ஏதேனும் உள்ளதா அல்லது அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது,” எனத் தெரிவித்தனர்.
மேலும் திருமணமாகி ஒரே மாதத்தில், பராமரிக்க வேண்டிய குழந்தையை மாற்றாந்தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அந்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
