அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் காதலனுடன் காரில் சென்றுகொண்டிருந்த 28 வயது இளம்பெண்ணை, ஒரு கும்பல் கத்திமுனையில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சில்சார் நகருக்கு வெளியே உள்ள பைபாஸ் சாலையில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது காதலனுடன் காரில் சென்றபோது, ‘மஹிந்திரா தார்’ வாகனத்தில் வந்த 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்துள்ளது. அவர்கள் இருவரையும் தாக்கி, காதலனைப் பிடித்து வைத்துக்கொண்டு அவர் கண்முன்னே அந்தப் பெண்ணை ஒரு கும்பல் வரிசையாக வன்கொடுமை செய்துள்ளது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10,000 பணத்தையும் அந்தக் கும்பல் வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்
பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், நிலோத்பால் தாஸ் (25) மற்றும் சுபோல் தாஸ் (27) ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இச்சம்பவம் குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற சுரஜித் சக்ரவர்த்தி என்ற செய்தியாளர் மீதும் குற்றவாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “பாஜக ஆளும் அசாமில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; தேர்தல் பணிகளுக்காக விஐபிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு சாதாரணக் குடிமக்களுக்குக் கிடைப்பதில்லை” என மாநிலங்களவை எம்.பி சுஷ்மிதா தேவ் விமர்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
