மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகக் கூறி 32 மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் உஜ்வால் பிரகாஷ் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அகமத்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 5 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கடந்த 21-ஆம் தேதி அந்த ஆசிரியர் மூங்கில் குச்சியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். தான் விரைவில் பள்ளி முதல்வர் ஆகிவிடுவேன் என்றும், அதன் பிறகு மாணவர்களைக் கவனித்துக் கொள்வதாகவும் அவர் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த 32 மாணவர்களும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கிறிஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் இது குறித்து அகமத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு சிறிய சந்தேகத்திற்காக பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவரே மிகக் கொடூரமாகத் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.