சென்னையில் தீய சக்திகளை விரட்டுவதாகக் கூறி இளம் பெண்ணிடம் 70 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் எவரெடி காலனியைச் சேர்ந்த புஜங்கர் ராம் என்பவர், தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் கதவோ அல்லது பீரோவோ உடைக்கப்படாததால், குடும்ப உறுப்பினர்களிடமே விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, புஜங்கர் ராமின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அவரது தோழி ஜெயஸ்ரீ மூலம் அறிமுகமான ஸ்ரீ தீப தர்ஷன் என்பவர், வீட்டில் தீய சக்தி இருப்பதாக பயமுறுத்தி, அதை விரட்ட பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி சிறுகச் சிறுக 70 சவரன் நகைகளை ஏமாற்றி வாங்கியது அம்பலமானது. இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், அரும்பாக்கம் பகுதியில் மறைந்திருந்த தீப தர்ஷனை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 63 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சம்பவத்தில் தீப தர்ஷனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஸ்வர்யாவின் தோழி ஜெயஸ்ரீயை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆன்மீகப் பரிகாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி படித்த இளைஞர்களிடமே இவ்வாறான துணிகர மோசடிகள் நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.