திருப்பூர் இரயில் நிலையத்தில், தனது காதலி புதிய காதலனை அறிமுகப்படுத்தியதால் ஆத்திரமடைந்த ஒடிசா மாநில வாலிபர், காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மாஜி (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வேலை தேடி தமிழகம் வந்தனர். பிரகாஷ் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், அந்த இளம்பெண் திருப்பூர் பல்லடம் அருகேயுள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்தனர்.

சமீபகாலமாக அந்த இளம்பெண்ணின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அவர் வேறொரு வாலிபருடன் காதலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பிரகாஷ் கேட்டபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காதலியைச் சமாதானப்படுத்தி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட பிரகாஷ், அவரைச் சந்திக்க திருப்பூர் இரயில் நிலையத்திற்கு அழைத்துள்ளார்.

நேற்று இரயில் நிலையத்திற்கு வந்த அந்தப் பெண், தனது புதிய காதலனையும் உடன் அழைத்து வந்துள்ளார். பிரகாஷிடம் அந்த வாலிபரை அறிமுகம் செய்து வைத்ததுடன், இனி அவருடன் தான் வாழப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் காதலியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புதிய காதலன், அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

இரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து, படுகாயமடைந்த பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே இருந்த இரயில்வே போலீசார், தப்பியோட முயன்ற பிரகாஷ் மாஜியைப் பிடித்துக் கைது செய்தனர். இரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.